சுவையான சுவைகள் - தொடர் அறிமுகம்

எதற்காக வீட்டில் சாப்பிடாமல் வெளியே உணவகங்கள் தேடிச் செல்கிறோம்? ஒவ்வொருவரும் சொல்வதற்கு,சில காரணங்கள் இருக்கின்றன .வேலைக்காக வெளியூர் வந்த திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, சமைத்துச் சாப்பிட நேரம் கிடைப்பதில்லை.அலுவலகம் முடித்து,அறைக்குத் திரும்பும் நேரத்தில் இட்லிகள்,பரோட்டாக்களை பார்சல் வாங்கிக் கொண்டு வந்து விடுகிறார்கள்.திருமானவர்களின் கதை வேறு. தினமும் வீட்டிலேயே சாப்பிட்டுச் சலித்துவிட்டது என்று,ஒருநாள் வெளியில் சாப்பிடக் குடும்பத்தோடு சென்று வருவார்கள்.இன்னும் சிலர்,இட்லி தோசை இரண்டையும் சுட்டு வைத்துக்கொண்டு,சட்னி குருமாவை கடையில் வாங்குபவர்களாக இருக்கின்றார்கள்.

உதாரணமாக,பட்டர் சிக்கன் மசாலா என்பதெல்லாம், தினமும் உப்புமா,தோசை,சாம்பார்,தக்காளி சாப்பாடு செய்து பழகிய சராசரி குடும்பப் பெண்ணுக்கு வெகுதூரம்.என்னதான் you tube ரெசிபிகள் பார்த்தாலும் அந்த ருசி வராது.உணவகம் சென்று 10 நிமிடம் காத்திருந்தால் , 120 ரூபாய்க்கு  பட்டர் சிக்கன் மணக்க மணக்க வாங்கிவந்து, இட்லி தோசைக்கு சாப்பிடும் சுகம் தனி என்று சொல்பவர்களும் உண்டு.5ரூபாய் டீ கடை வந்த பிறகு வீட்டில் பால் வாங்குவதை நிறுத்திய பண்டிதர்களும் நம் ஊரில் இருக்கிறார்கள்.உறவினர்கள் யாரேனும் வந்தால்,பாத்திரத்தைத் தூக்கிக்கொண்டு ஆவின் கடை நோக்கி ஓடுகிறார்கள்.(உண்மை :அப்படி அவர்கள் செல்வதை பார்த்த உடனே,வீட்டை விட்டு ஓடி விடுகிறார்கள் உறவினர்கள்).

உணவகங்களின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக நான் கருதுவது இதைத் தான். உதாரணமாக, ஒரு சுவையான பருப்பு வடை வீட்டில் சுடுவதற்கு, எத்தனை வேலை செய்ய வேண்டும்? பதமாக பருப்பு அரைத்து,சிறு வெங்காயம் வெட்டிப் போட்டு, மல்லி கருவேப்பிலை சேர்த்து, மாவு நீர்விடுவதற்கு முன்பு கையில் எடுத்து, அளவான சூட்டில் வேகும் எண்ணெயில் போட்டு,இரு பக்கமும் நன்கு வேகவிட்டு, அதேவேளை தீய்த்தும் விடாமல் எடுத்து, பரிமாறுவதற்குள் தேநீர் வேண்டும் என்பார் குடும்பத்தலைவர். அதையும் சேர்த்து மேசையில் வைக்கும் நேரம் வடை ஆறிவிடும். திட்டிக்கொண்டே கணவன் வடையை ஜவ்வு மாதிரி சாப்பிடும் அழகில், குடும்பத்தலைவி இன்னொருமுறை இவ்வளவு சிரமப்பட்டு வடை சுடுவாள் என்பது என்ன நிச்சயம்? அதற்கான சிறந்த மாற்று, 10ரூபாய்க்கு 4 வடை என்று விளம்பரம் செய்யும் முக்குக்கடை.10 ரூபாயில், ஒரு பருப்பு வடை,ஒரு மெதுவடை மற்றும் இரண்டு மசாலா போண்டா சுவைத்து விடலாம் என்பது வரப்பிரசாதம் அல்லவா? வெறும் 10ரூபாயில் அது கிடைக்கும்போது யாருக்கு வீட்டில் வடைசுட எண்ணம் வரும்? ( குட்டு : வீட்டில் உள்ளவர்கள் ஆரோக்கியமாக இருக்க நினைக்கும் மக்கள்  நன்றாக வடை சுட்டுக் பழகிவிடுவார்கள்).

வீட்டுக்கு வெளியே வந்து பாருங்கள் .ஒவ்வொரு தெருவிலும் இரண்டு பானிபூரி கடைகள்,இரண்டு பேக்கரிகள் ,ஒரு துரிதஉணவு கடை,இரண்டு தள்ளுவண்டி கடை,மசால்பொரி கடைகள்,நிச்சயம் ஒரு மெஸ் (சைவம் &அசைவம்) என்ற பெயரில் இருக்கின்றன.ஒவ்வொரு கடையிலும் கூட்டம் அள்ளுகிறது.அதே அளவு கூட்டம் மருத்துவமனைகளிலும் நிரம்புவதும் கசப்பான உண்மை.இத்தனைக்கும் காரணம் எது? எதற்காக எதை நிவர்த்தி செய்ய இத்தனை கோடி உணவகங்கள் உலகம் முழுக்கக் கடை விரித்துக் காத்திருக்கின்றன? இரண்டு எழுத்து ரகசியம் அது.
அதுவே, "சுவை"


உணவகங்கள், அவற்றின் வகைகள்,அவை பரிமாறும் உணவுகள்,சிறப்பம்சங்கள் மற்றும் சுவையான உணவுகள் பற்றிய ஆழ்ந்த அலசல்கள் - என இந்தத் தொடரில் நாம் காணப் போகிறோம். நிச்சயம் உணவுப் பிரியர்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். மீண்டும் அடுத்த பதிவில்  (ச)சிந்திப்போம்.

- ராஜ்குமார் (27-Nov-18)

Comments